Wednesday, December 28, 2016

2016 | Books

இவ்வாண்டில் நான் வாசித்த சிறந்த பத்து புத்தகங்கள் என்று பதிவு போடுமளவிற்கு நிறைய வாசித்து விடவில்லை. இருந்தாலும் என்னளவில் எனக்கு மன நிறைவை அளித்த பத்து புத்தகங்கள் பற்றிய பதிவு தான் இது.

குற்றப்பரம்பரை:

இவ்வருடமே குற்றப்பரம்பரையோடு தான் தொடங்கியது.

தென் தமிழகத்தை சேர்ந்த எனக்கு அதன் மொழியோ பழக்க வழக்கங்களோ எங்கு பதிவு செய்யப்பட்டாலும் அதன் பால் ஓர் ஈர்ப்புண்டு. அவ்வகையில் குற்றப்பரம்பரை மீதும். ஆரம்பத்தில் சற்று கடினமாக இருக்கும் வேல ராமமூர்த்தியின் மொழி நடை பின் இலகுவாகிறது. இந்நாவல் வார்த்தை வர்ணனைகளால் ஈர்க்கும் இலக்கிய வகை அல்ல. ஒரு கமெர்ஷியல் படத்தை போல சுவாரசியமான சம்பவங்களின் அடிப்படையிலானது. உண்மையில் சமூக பாகுபாடற்றே கள்ளர் சமுதாயம் பழகி வந்திருக்குமானால் தற்கால சூழ்நிலையின் விதை எங்கு விதைக்கப்பட்டது என்றும் தெரிந்துகொள்ள ஆவல்பின் இதே நாவல் பாலா-பாரதிராஜா புண்ணியத்தில் ஜூலை புத்தக கண்காட்சியில் limelightல் வந்தது.

நெடுஞ்சாலை:


சி.எல் எனப்படும் அத்துக்கூலிகளின் வாழ்வினூடே 90 களின் அரசு போக்குவரத்து கழகத்தின் மீதான ஒரு பார்வை தான் நெடுஞ்சாலை. எந்த இடத்திலும் மிகைப்படுதலே இல்லாத ஒரு சுகமான பேருந்து பேச்சை போன்றதொரு நாவல். மிக முக்கியமாய் கண்மணி குணசேகரன் எந்த இடத்திலும் அவரது நிலைப்பாடையோ கருத்துக்களையோ நம் மீது திணிக்கவில்லை. கடைசி நூறு பக்கங்கள் ஒரு செயல்பாடில்லாத பேருந்து எப்படி தேசிய நெடுஞ்சாலையில் சென்னை வரை சென்று வருகிறது என்பது தான். இதை கொஞ்சமும் தொய்வில்லாமல் கொண்டு சென்றிருக்கிறார்.


ஏழாம் உலகம்:

தமிழா மலையாளமா என்ற குழப்பத்திலேயே பலமுறை வாசிக்க ஆரம்பித்து கை விடப்பட்ட நாவல். ஒரு வழியாக இவ்வருடம் வாசிக்க முடிந்தது.

நான் கடவுளின் பிச்சைக்காரர்கள் பகுதி எல்லாம் இந்நாவலுக்கு முன் சும்மா. நிஜமாகவே வேறு ஒரு உலகத்தின் வாழ்க்கையை கொஞ்சமும் ஈவிரக்கமில்லாது தந்திருப்பார் ஜெயமோகன். மனத்திடமிருந்தால் அவசியம் வாசிக்க வேண்டிய நாவல்.

சோளகர் தொட்டி:

கொஞ்சமும் எதிர்பார்க்காமல் வாசிக்க ஆரம்பித்து பின் பெரியதொரு அனுபவத்தை தந்தது இந்நாவல் .
முதல் பாதி சோளகர் என்ற மலை வாழ் மக்களின் வாழ்க்கை முறை பற்றியும் இரண்டாம் பாதி வீரப்பன் தேடுதல் வேட்டையினால் அவர்கள் பட்ட துன்பங்களை பற்றியும் பேசுகிறது. வீரப்பன் மரணத்தை அரசின்/போலீசின் சாதனையாக சிலாகிப்பவர்கள் ஒரு முறை இதை வாசித்து விடுதல் நலம்.

உப்பு நாய்கள்:

பெரும்பான்மை சமூகம் முகம் சுளிக்கும் அத்தனை விஷயங்களும் உப்பு நாய்களில் உண்டு. உடல், சமூகம் சார்ந்து ஒழுங்கீனங்களாக கருதப்படுபவை அன்றாடம் எங்கேனும் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும். அதன் மேல் விமர்சனப்பார்வைகளற்று ஒரு வெளிச்சத்தின் உதவியால் ஊடுருவி பார்ப்பதுதான் இந்நாவல்.

உடையார்:

தோராயமாக 2700 பக்கங்கள். தமிழின் magnum opus நாவலை இவ்வருடத்தில் தான் வாசிக்க நேர்ந்தது. போருக்காக ஒதுக்கிய ஒரு பாகம் தவிர மிச்சமுள்ள ஐந்து பக்கங்களும் இப்பூவுலகில் நான் பெரிதும் விதந்தோர்ந்தும் தஞ்சை பெரிய கோயில் உருவானதை பற்றிய கதை. . இடையிடையே பாலகுமாரன் ப்ராண்ட் வாழ்க்கை தத்துவங்கள்.

ஒரு கடலோர கிராமத்தின் கதை:

சுதந்திரத்துக்கு முந்தைய ஒரு கடலோர கிராமத்தின் வழியாக அக்கால இஸ்லாமிய சமூகத்தின் பதிவாகவே இந்நாவலை கருத நேர்கிறது. வெகு சில புத்தகங்களே வாசிக்கும் பொழுது மன சஞ்சலங்களுக்கு இடமளிக்காமல் ஒரு நிறைவை தரும். அது ஒரு கடலோர கிராமத்தின் கதை மூலமாகவும் உங்களுக்கு கிடைக்கலாம்

ஆழி சூழ் உலகு :

முதல் பத்து பக்கம் தாண்டுவது மிக மிக கடினம். ஜோ டி க்ரூஸின் attached vocabulary உதவியுடன் தான் கரை சேர முடிந்தது. எல்லோருடைய  வாழ்வினிலிலும் நடக்க  கூடியதை  இது மீனவர்/பரதவர்களின் சூழலில்  பேசுகிறது 

குள்ள சித்தன் சரித்திரம்:

ஒரே மூச்சில் படித்து முடிக்க சாலச்சிறந்த புத்தகம். புதிதாய் வாசிக்க பழகியிருப்பவர்கள் ஒரு வெள்ளை தாளும் பேனாவுமாய் படிக்க உட்காருவது உசிதம். கதாப்பாத்திரங்களை மேப் போட்டு வைத்து கொண்டால் பின் வரும் முடிச்சுக்கள் அவிழும் பொழுது உதவியாயிருக்கும். நவீன இலக்கியங்கள் என்று சொல்லப்படும் படைப்புகள் பெரும்பாலும் கதையில் எழும் கேள்விகளின் விடைகளை வாசிப்பவரின் ஊகங்களுக்கே விட்டு விடுகின்றன. இந்நாவலும் இந்த அடிப்படையிலேயே. பல அடுக்குகளாக விரியும் கதைக்கு யுவனின் மொழி பெரும் பலம் சேர்க்கிறது. பெரிதாய் நாவல்களில் பதியப்படாத செட்டிநாட்டு மொழியையும் வெகு இலகுவாய் கையாண்டிருக்கிறார். பிரசங்கமாக இல்லாமல் அங்கங்கே வரும் வாழ்வியல் விளக்கங்களும் ஏற்று கொள்ளக்கூடியதாகவே உள்ளன. ஒரு பெரும் வாசிப்பு அனுபவம் நிச்சயம் கிடைக்கும்.

ஆண்பால் பெண்பால் :

ஆண்பால் பெண்பால் என்ற தலைப்பு, அருண், பிரியா என்ற இரு தனி அத்தியாயங்கள் எல்லாம் சேர்ந்து நாவல் எதன் அடிப்படையில் இருக்க போகிறது என்று முன்னரே யூகிக்க முடிந்தது. ஒவ்வொரு சம்பவமும் ஆண் பெண் (பொதுவாக இரு நபர்கள் என்றும் வைத்து கொள்ளலாம்) இருவரின் பார்வையில் சிறப்பாகவே சொல்லப்பட்டுள்ளது (குறிப்பாக முதலிரவு சம்பத்தப்பட்ட பகுதி). ஒரு வித குழப்பமான சம்பவங்களால் பிரியாவின் அத்தியாயம் எரிச்சலூட்டினாலும் பின்வரும் சம்பவங்களால் அது justify செய்யப்படுகிறது. நாவலோடு பொருந்தி இருந்தாலும் எம்ஜிஆர் தொடர்பான reference அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது. 


நாம் அனைவருமே நமக்கு கிடைத்த தகவல்களின்(limited information) அடிப்படையிலே முடிவுகளை மேற்கொள்கிறோம். அதை தாண்டி நம் பார்வைக்கே வராமல் போகக்கூடிய தகவல்களும் இருக்ககூடும் என்று பெரும்பான்மையோர் உணர்வதில்லை. அதிகபடியான தகவல்கள் நாம் கொண்ட எண்ணங்களை முற்றிலும் மாற்றியமைக்க கூடிய வாய்ப்பும் உண்டு. அப்படித்த்தான் இங்கு நம்மை ஒரு முடிவு செய்ய வைத்து, முழு நாவலிலும் அதை உறுதிப்படுத்தி விட்டு ஓரிரு பக்கங்களில் கதையை முற்றிலும் எதிராக திருப்புகிறார் நாவலாசிரியர் 

Saturday, December 3, 2016

அம்மாச்சி

அம்மா எல்லாருக்குமே ஸ்பெஷல் ! அது போலவே அம்மா வழி சொந்தங்களும். அம்மாச்சியும் எனக்கு அப்படியே. அம்மாச்சி என்றவுடன் நினைவுக்கு வருவது அவரது சுருங்கிய தோல் தான். நினைவு தெரிந்த நாளிலிருந்தே அவர் பல்செட் தான் பயன்படுத்துவார். கர்மசிரத்தையாக அவர் அந்த பல்செட்டை துலக்குவது செம comedyaa  இருக்கும். பொக்கை வாயோடும் சுருங்கிய தோலோடும் கிடைக்கும் முத்தம் சிலிர்ப்பு !! கொஞ்ச நேரம் வேலை பார்த்ததற்கே அலுக்கும் நமக்கு. ஆனால் விடி காலையில் எழுந்தது முதல் உறங்கும் வரை சமைப்பது, மாட்டுக்கு வைகோல் குடுப்பது, சாணம் அள்ளுவது என்று அம்மாச்சி எப்போதும் பிஸி தான். சாதாரண புளி குழம்பே அம்மாச்சி கை பக்குவத்தில் கமகமக்கும். 70 வயதில் பார்வை குன்றிய கண்கள், அவ்வளவாக நடக்கவும் முடியாத காலத்திலும் ஆக்டிவாக இருப்பார். என்னை ரொம்ப கொஞ்சியதெல்லாம் இல்லை. ஒவ்வொரு விடுமுறைக்கும் தான் போவோம். ஒரு வாரம் தங்கி விட்டு கிளம்பும் நாளில் மனசே இருக்காது. வீட்டு வாசல் தாண்டி வழியனுப்பும் போது அழுதே விடுவார்.

 இன்று அம்மாச்சி இல்லை. இறந்து ஒரு வருடம் ஆகிறது. அவர் இருந்த நாளை விட காலஞ்சென்றதர்க்கு பிறகு அவரை நினைக்காத நாளே இல்லை. காரணம் அம்மா !! அம்மாச்சி இறந்த போது அம்மாவின் கண்ணீரில் " என் தாய் வழி தொடர்புகள் போய் விட்டதே " என்ற வலி. உடலை எடுத்து சென்ற ஊர்வலத்தை மறைத்து விழுந்து கும்பிட்டார். எனக்கு அது சொல்லாமல் சொன்ன விஷயங்கள் ஆயிரம். அத்தனை நேரம் அமைதியாயிருந்த தாத்தா சிதையில் தீ வைக்கும் முன் தாலியை கழட்டும் போது அழுத அழுகையில் ஒரு தலைமுறையின் காதல் தெரிந்தது !!

P.S: Written 4 years ago. Posting since it's ammachi's anniversary today

Saturday, June 11, 2016

பத்திமை

“ஏய்யா வந்து ஒரு வாய் சாப்ட்டு போயா"

சாயந்தரத்திலிருந்து பல முறை கூப்பிட்டு விட்டாள் அன்னமயில்.

சபரி அசைந்தே கொடுக்கவில்லை. உட்கார்ந்து அசை போட்டு கிடந்த ஆட்டின் மேல் தலை வைத்து படுத்தே கிடந்தான்.

“ஒரு சின்ன புள்ளைக்கு சோறூட்ட வக்கில்ல நீ எல்லாம் என்ன பொம்பளை” - கயித்து கட்டிலை இழுத்து போட்டவாறே இரைந்தார் ரத்தினம்.

“ஆமா இவரு தான் இவ்வளவு நாள் பாத்து கிழிச்சாரு..” என்றவாறு சோற்றை பிசைந்து கொண்டு திண்ணைக்கே வந்தாள் அன்னமயில்.

***

“அய்யா ஒரு வாய் சாப்டுயா”
“அப்ப நீ குட்டிமணிக்கும் ஊட்டு அப்பத்தா”
“அது சோறு சாப்பிடாதுல்ல”
“அப்ப வேற எதாவது குடு

வெளியில் ஒடித்து கிடந்த முருங்கை கொத்தை எடுத்து வந்தாள் அன்னமயில். காலையிலிருந்தே ஏகப்பட்டதை தின்று விட்டதால் பெரிதாய் அலட்டி கொள்ள வில்லை. போனால் போகிறதென்று இலையை வாங்கி மெல்ல ஆரம்பித்தது.

***
ரத்தினம் அன்னமயிலின் பேரன் தான் சபரி. இல்லாத அதிசயமாய் பெய்த மழையிடமிருந்து தப்பி மகன் ராமநாதன் குடும்பத்தோடு வந்து சேர்ந்தான். ரெண்டு நாளிலேயே தண்ணி எல்லாம் வடிஞ்சுடுச்சாம் என்று கிளம்பிய பொழுது தடுத்து விட்டாள் அன்னமயில்.

வெள்ளம் வடிஞ்ச ஊருல கொள்ள நோயி பரவும். நீங்க வேணா போங்க புள்ள இங்கயே கொஞ்ச நாள் இருக்கட்டும்

“இருக்கியாடா” என்று மகன் கேட்டதும்,நான் இருக்கேன் அப்பத்தா” என்றவாறு கட்டிக்கொண்டான்

புள்ளை பிறந்து கூட்டி போன பிறகு சபரி சேர்ந்தால் போல் ஒரு பத்து நாள் இருந்தது இல்லை. எப்போது விட்டு போக சொன்னாலும் ராமநாதன் மறுத்து விடுவான். அவனை ஒன்றும் குறை சொல்ல முடியாது. 5 மைல் சைக்கிள் அழுத்தி மனமேல்க்குடி போய் தான் பள்ளிக்கூடம் படிச்சான். பின் கோயமுத்தூரில் காலேஜுக்கு  அவனை சேர்க்க போயிருந்த வாத்தியார் எவ்வளவு பெரிய இடம் என்று சொல்லியே ஓய்ந்து போனார். படித்து முடித்தவுடன் வேலை. இரண்டு வருடத்தில் கல்யாணமும் முடிச்சாச்சு. மருமகளும் மகனுக்கு ஒன்றும் குறைச்சலில்லை. கும்பகோணத்தில் வசதியை வாழ்ந்திருந்தாலும் இங்கு வரும் போது எந்த குறையும் சொல்வதில்லை. வீட்டை பிரிச்சு கட்டனும் என்ற பொழுது கூட மறுத்து விட்டாள். “வேனாம்த்தே எல்லாரும் வாழ்ந்த வீடு அப்படியே இருக்கட்டும்”

சபரியை பார்க்காமல் அன்னமயிலுக்கு தான் இருப்பு கொள்ளாது. திருவிழா பண்டிகை என்று அவர்கள் வந்து கிளம்பிய ரெண்டு நாளில் இவளும் சென்னை சென்று விடுவாள். ரொம்ப நாள் இருப்பதில்லை. மாடு கண்ணு கெடக்கு, வீடு போட்டமன்னிக்கே கிடக்கும் என்று சொல்லி இரண்டு நாளில் ஊருக்கு கிளம்பி விடுவாள். உண்மையில் அதை எல்லாம் பார்த்து கொள்ள ஆட்களிருக்கிறார்கள். ரத்தினத்தை விட்டு இருக்க தான் மனசு இருக்காது. “இத்தனை வருஷம் கழிச்சு யார் சமச்சோவா சாப்பிடனும்”

***

“என் ராசா.. தூங்கலாமா?”
“நா குட்டிமணி கூடயே படுத்துக்குறேன் அப்பத்தா”
“இல்லப்பா அது வெளில தான் தூங்கணும்”
“ஏன்”
“சொன்ன கேளுப்பா
“அதெல்லாம் முடியாது”

அவன் சொல்வதை மதிக்காமல் ஆட்டை திண்ணையிலிருந்து இழுத்து சென்றாள் அன்னமயில். அது மே மே என்று தொடர்ந்து கத்த சபரி ஓடி வந்து பின்னால் இழுத்தான். ஆட்டை கட்டிய பிறகு முண்டிய அவனை தூக்கி கொண்டு சென்றாள் அன்னமயில். பின் இரவு வெகு நேரம் சபரி அழுகையை நிப்பாட்ட வில்லை. அதட்டியும் மிரட்டியும் தூங்க வைத்தாள்.

***
எப்போழுது ஊருக்கு வந்தாலும் சபரியை கையில் பிடிக்க முடியாது. ஊரையே சுற்றி வந்து விடுவான். “புள்ள தங்கமா இருக்கு ஊரு கண்ணே இது மேல தான் சுத்தி போடாத்தா” என்று சொல்லாதவர்களில்லை. ஆனால் இந்த முறை மொத்தமாய் முடங்கி போய் விட்டான். எல்லாம் இந்த ஆட்டினால் தான்.
இரண்டு வாரங்களுக்கு முன் கோட்டைபட்டினம் போன ரத்தினம் வரும்போது இந்த ஆட்டையும் இழுத்து கொண்டு வந்தார்.

“நம்ம மாரிமுத்து வீட்டு குட்டி. நல்ல இளசா இருக்குனு தூக்கி கொடுத்தான்”

சபரி வந்த உடனேஅப்பா கோட்” என்று கத்தி கொண்டு கிட்டே சென்றான்

“இதுக்கு பேர் என்ன தாத்தா”
“பேர் எல்லாம் வைக்கல பா”
“நா வைக்கட்டா.. ‘குட்டிமணி’”

அன்றிலிருந்து நாளும் பொழுதும் ஆட்டுடன் தான். தானாய் அவனுக்கு தோன்றியெதெல்லாம் அதனுடன் பேசிகொண்டிருந்தான். சும்மா விளையாட்டு தானே என்று அன்னமயிலும் கண்டு கொள்ள வில்லை. இப்பொழுது இந்த அளவுக்கு வளர்த்து விட்டது.

*** 

காலை விடிந்தவுடன் ஆடு மாட்டை மேய்ச்சலுக்கு அவிழ்த்து விட்டு சமையக்கட்டுக்குள் வந்தாள் அன்னமயில். ரத்தினம் காலையிலே கொல்லைக்கு போய் விட்டார். அவருக்கும் வேலை பார்ப்பவர்களுக்கும் சாப்பாடு செய்வது தான் இன்று பெரிய வேலை. மும்முரமாய் இருந்த பொழுது ஆடு கத்தும் சத்தம் கேட்டது. சனியன் அதுவே திண்ணைக்கு வந்து விட்டது எல்லாம் இந்த பயல் பண்ணிய வேலை என்று திட்டியவாறே வேலையே தொடர்ந்தாள்.

ஆடு கத்துவது நின்றபாடில்லை. சமைப்பதை விட்டு விட்டு திண்ணைக்கு வந்தாள் அன்னமயில். சபரி அசையமால் படுத்திருக்க ஆடு அவனை பார்த்து தொடர்ந்து கத்தி கொண்டிருந்தது. ஓடி போய் சபரியை தூக்கியவள் பதறிப்போனாள். உடம்பு நெருப்பாய் கொதித்தது. கண் விழிக்க முடியாமல் முனங்கி கொண்டிருந்தான்.

“ஐயோ என் புள்ளைக்கு என்னாச்சோ”
“ஏன்டா பச்சமுத்து கொல்லைக்கு போய் ஓங்க அய்யாவ ஒடனே கூட்டிகிட்டு வா”
“சரி ஆத்தா

கொஞ்ச நேரத்தில் எல்லாரும் கூடி விட்டார்கள். சுடு தண்ணீரில் நனைத்து நெற்றியில் ஒத்தடம் கொடுத்தார்கள். “சாதாரண காய்ச்சலாத்தான் இருக்கும் நீ கவல படாத ஆத்தா” என்றாள் கலையரசி.

“மாமா ஒன்னும் பதட்டப்பட வேணாம்.. ராவுத்தர் வீட்டுக்கு ப்ளெசர் வந்துருக்கு. அர மணி நேரத்துல அறந்தாங்கி கூட்டி போயி குளுகோஸ் ஏத்திட்டோம்னா ஒன்னும் பிரச்சனையில்ல

***

போகும் வழி எங்கும் அழுது கொண்டே வந்தாள் அன்னமயில். இந்த முறை நடவு வேலைகளும் இருந்ததால் சபரியை கவனிக்க முடியவில்லை. நாளை மகன் வந்து இதுக்கு தான் விட்டு போக சொன்னியா என்று ஒரு வார்த்தை கேட்டு விட்டால் என்ன செய்வது.

ஊர் எல்லை தாண்டும்போதுஅய்யனாரப்பா என் புள்ளைய காப்பாத்து உன் கோயிலுக்கு வந்து கெட வெட்டறேன்” என்று வேண்டி கொண்டாள்.

***
வைரஸ் காய்ச்சல் எனவும் சரியாக சாப்பிடாததால் மயக்கமடைந்ததாகவும் ஆசுபத்திரியில் சொன்னார்கள். இரண்டு நாட்கள் தங்க வேண்டியதாக போய் விட்டது. மகனும் அடுத்த நாளே புறப்பட்டு வந்து அன்றிரவே கிளம்ப இருப்பதாக சொன்னான். அவர்கள் இருக்கும் பொழுதே கிட வெட்டு நடத்த முடிவு செய்தாள் அன்னமயில்.

அன்று ஞாயிற்றுகிழமை. ரத்தினத்தை பார்த்துக்க சொல்லி விட்டு வெள்ளனவே கிளம்பி ஊருக்கு வந்து விட்டாள். நல்ல கெடாவை தேடி ஆட்டு மந்தை வைத்திருக்கும் சோமு வீட்டிற்கு சென்றாள். எல்லாம் முத்தினதாய் இருந்தது.

ஏன் ஆத்தா வீட்டிலே நல்ல இளங்குட்டி நிக்குதே நீ எதுக்கு ஊரு பூரா தேடுற
“இல்ல பய அது மேல பாசமா இருப்பான்”
“அட என்ன ஆத்தா நீ.. இன்னைக்கு இல்லேனா இன்னொருநாள் வெட்டுபடனும். நல்ல இளம் ஆட்டுக்கறி கொடுத்தா தான் முடியாம இருக்க புள்ளைக்கும் நல்லது”

***

அவர்கள் வருவதற்கும் இங்கு பூசை போடுவதற்கும் சரியாக இருந்தது காரிலிருந்து இறங்கிய சபரிக்கு துண்ணூறு பூசி விட்டார் பூசாரி. அவன் ராமநாதன் தோளிலிருந்து இறங்கவேயில்லை. பின் வீட்டிற்கு போனதும் சாப்பாடு போட்டார்கள். கறியை நசுக்கி ஊட்டினார் ரத்தினம். மெதுவாக மெல்ல தொடங்கினான் சபரி.