Wednesday, December 28, 2016

2016 | Books

இவ்வாண்டில் நான் வாசித்த சிறந்த பத்து புத்தகங்கள் என்று பதிவு போடுமளவிற்கு நிறைய வாசித்து விடவில்லை. இருந்தாலும் என்னளவில் எனக்கு மன நிறைவை அளித்த பத்து புத்தகங்கள் பற்றிய பதிவு தான் இது.

குற்றப்பரம்பரை:

இவ்வருடமே குற்றப்பரம்பரையோடு தான் தொடங்கியது.

தென் தமிழகத்தை சேர்ந்த எனக்கு அதன் மொழியோ பழக்க வழக்கங்களோ எங்கு பதிவு செய்யப்பட்டாலும் அதன் பால் ஓர் ஈர்ப்புண்டு. அவ்வகையில் குற்றப்பரம்பரை மீதும். ஆரம்பத்தில் சற்று கடினமாக இருக்கும் வேல ராமமூர்த்தியின் மொழி நடை பின் இலகுவாகிறது. இந்நாவல் வார்த்தை வர்ணனைகளால் ஈர்க்கும் இலக்கிய வகை அல்ல. ஒரு கமெர்ஷியல் படத்தை போல சுவாரசியமான சம்பவங்களின் அடிப்படையிலானது. உண்மையில் சமூக பாகுபாடற்றே கள்ளர் சமுதாயம் பழகி வந்திருக்குமானால் தற்கால சூழ்நிலையின் விதை எங்கு விதைக்கப்பட்டது என்றும் தெரிந்துகொள்ள ஆவல்பின் இதே நாவல் பாலா-பாரதிராஜா புண்ணியத்தில் ஜூலை புத்தக கண்காட்சியில் limelightல் வந்தது.

நெடுஞ்சாலை:


சி.எல் எனப்படும் அத்துக்கூலிகளின் வாழ்வினூடே 90 களின் அரசு போக்குவரத்து கழகத்தின் மீதான ஒரு பார்வை தான் நெடுஞ்சாலை. எந்த இடத்திலும் மிகைப்படுதலே இல்லாத ஒரு சுகமான பேருந்து பேச்சை போன்றதொரு நாவல். மிக முக்கியமாய் கண்மணி குணசேகரன் எந்த இடத்திலும் அவரது நிலைப்பாடையோ கருத்துக்களையோ நம் மீது திணிக்கவில்லை. கடைசி நூறு பக்கங்கள் ஒரு செயல்பாடில்லாத பேருந்து எப்படி தேசிய நெடுஞ்சாலையில் சென்னை வரை சென்று வருகிறது என்பது தான். இதை கொஞ்சமும் தொய்வில்லாமல் கொண்டு சென்றிருக்கிறார்.


ஏழாம் உலகம்:

தமிழா மலையாளமா என்ற குழப்பத்திலேயே பலமுறை வாசிக்க ஆரம்பித்து கை விடப்பட்ட நாவல். ஒரு வழியாக இவ்வருடம் வாசிக்க முடிந்தது.

நான் கடவுளின் பிச்சைக்காரர்கள் பகுதி எல்லாம் இந்நாவலுக்கு முன் சும்மா. நிஜமாகவே வேறு ஒரு உலகத்தின் வாழ்க்கையை கொஞ்சமும் ஈவிரக்கமில்லாது தந்திருப்பார் ஜெயமோகன். மனத்திடமிருந்தால் அவசியம் வாசிக்க வேண்டிய நாவல்.

சோளகர் தொட்டி:

கொஞ்சமும் எதிர்பார்க்காமல் வாசிக்க ஆரம்பித்து பின் பெரியதொரு அனுபவத்தை தந்தது இந்நாவல் .
முதல் பாதி சோளகர் என்ற மலை வாழ் மக்களின் வாழ்க்கை முறை பற்றியும் இரண்டாம் பாதி வீரப்பன் தேடுதல் வேட்டையினால் அவர்கள் பட்ட துன்பங்களை பற்றியும் பேசுகிறது. வீரப்பன் மரணத்தை அரசின்/போலீசின் சாதனையாக சிலாகிப்பவர்கள் ஒரு முறை இதை வாசித்து விடுதல் நலம்.

உப்பு நாய்கள்:

பெரும்பான்மை சமூகம் முகம் சுளிக்கும் அத்தனை விஷயங்களும் உப்பு நாய்களில் உண்டு. உடல், சமூகம் சார்ந்து ஒழுங்கீனங்களாக கருதப்படுபவை அன்றாடம் எங்கேனும் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும். அதன் மேல் விமர்சனப்பார்வைகளற்று ஒரு வெளிச்சத்தின் உதவியால் ஊடுருவி பார்ப்பதுதான் இந்நாவல்.

உடையார்:

தோராயமாக 2700 பக்கங்கள். தமிழின் magnum opus நாவலை இவ்வருடத்தில் தான் வாசிக்க நேர்ந்தது. போருக்காக ஒதுக்கிய ஒரு பாகம் தவிர மிச்சமுள்ள ஐந்து பக்கங்களும் இப்பூவுலகில் நான் பெரிதும் விதந்தோர்ந்தும் தஞ்சை பெரிய கோயில் உருவானதை பற்றிய கதை. . இடையிடையே பாலகுமாரன் ப்ராண்ட் வாழ்க்கை தத்துவங்கள்.

ஒரு கடலோர கிராமத்தின் கதை:

சுதந்திரத்துக்கு முந்தைய ஒரு கடலோர கிராமத்தின் வழியாக அக்கால இஸ்லாமிய சமூகத்தின் பதிவாகவே இந்நாவலை கருத நேர்கிறது. வெகு சில புத்தகங்களே வாசிக்கும் பொழுது மன சஞ்சலங்களுக்கு இடமளிக்காமல் ஒரு நிறைவை தரும். அது ஒரு கடலோர கிராமத்தின் கதை மூலமாகவும் உங்களுக்கு கிடைக்கலாம்

ஆழி சூழ் உலகு :

முதல் பத்து பக்கம் தாண்டுவது மிக மிக கடினம். ஜோ டி க்ரூஸின் attached vocabulary உதவியுடன் தான் கரை சேர முடிந்தது. எல்லோருடைய  வாழ்வினிலிலும் நடக்க  கூடியதை  இது மீனவர்/பரதவர்களின் சூழலில்  பேசுகிறது 

குள்ள சித்தன் சரித்திரம்:

ஒரே மூச்சில் படித்து முடிக்க சாலச்சிறந்த புத்தகம். புதிதாய் வாசிக்க பழகியிருப்பவர்கள் ஒரு வெள்ளை தாளும் பேனாவுமாய் படிக்க உட்காருவது உசிதம். கதாப்பாத்திரங்களை மேப் போட்டு வைத்து கொண்டால் பின் வரும் முடிச்சுக்கள் அவிழும் பொழுது உதவியாயிருக்கும். நவீன இலக்கியங்கள் என்று சொல்லப்படும் படைப்புகள் பெரும்பாலும் கதையில் எழும் கேள்விகளின் விடைகளை வாசிப்பவரின் ஊகங்களுக்கே விட்டு விடுகின்றன. இந்நாவலும் இந்த அடிப்படையிலேயே. பல அடுக்குகளாக விரியும் கதைக்கு யுவனின் மொழி பெரும் பலம் சேர்க்கிறது. பெரிதாய் நாவல்களில் பதியப்படாத செட்டிநாட்டு மொழியையும் வெகு இலகுவாய் கையாண்டிருக்கிறார். பிரசங்கமாக இல்லாமல் அங்கங்கே வரும் வாழ்வியல் விளக்கங்களும் ஏற்று கொள்ளக்கூடியதாகவே உள்ளன. ஒரு பெரும் வாசிப்பு அனுபவம் நிச்சயம் கிடைக்கும்.

ஆண்பால் பெண்பால் :

ஆண்பால் பெண்பால் என்ற தலைப்பு, அருண், பிரியா என்ற இரு தனி அத்தியாயங்கள் எல்லாம் சேர்ந்து நாவல் எதன் அடிப்படையில் இருக்க போகிறது என்று முன்னரே யூகிக்க முடிந்தது. ஒவ்வொரு சம்பவமும் ஆண் பெண் (பொதுவாக இரு நபர்கள் என்றும் வைத்து கொள்ளலாம்) இருவரின் பார்வையில் சிறப்பாகவே சொல்லப்பட்டுள்ளது (குறிப்பாக முதலிரவு சம்பத்தப்பட்ட பகுதி). ஒரு வித குழப்பமான சம்பவங்களால் பிரியாவின் அத்தியாயம் எரிச்சலூட்டினாலும் பின்வரும் சம்பவங்களால் அது justify செய்யப்படுகிறது. நாவலோடு பொருந்தி இருந்தாலும் எம்ஜிஆர் தொடர்பான reference அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது. 


நாம் அனைவருமே நமக்கு கிடைத்த தகவல்களின்(limited information) அடிப்படையிலே முடிவுகளை மேற்கொள்கிறோம். அதை தாண்டி நம் பார்வைக்கே வராமல் போகக்கூடிய தகவல்களும் இருக்ககூடும் என்று பெரும்பான்மையோர் உணர்வதில்லை. அதிகபடியான தகவல்கள் நாம் கொண்ட எண்ணங்களை முற்றிலும் மாற்றியமைக்க கூடிய வாய்ப்பும் உண்டு. அப்படித்த்தான் இங்கு நம்மை ஒரு முடிவு செய்ய வைத்து, முழு நாவலிலும் அதை உறுதிப்படுத்தி விட்டு ஓரிரு பக்கங்களில் கதையை முற்றிலும் எதிராக திருப்புகிறார் நாவலாசிரியர் 

Saturday, December 3, 2016

அம்மாச்சி

அம்மா எல்லாருக்குமே ஸ்பெஷல் ! அது போலவே அம்மா வழி சொந்தங்களும். அம்மாச்சியும் எனக்கு அப்படியே. அம்மாச்சி என்றவுடன் நினைவுக்கு வருவது அவரது சுருங்கிய தோல் தான். நினைவு தெரிந்த நாளிலிருந்தே அவர் பல்செட் தான் பயன்படுத்துவார். கர்மசிரத்தையாக அவர் அந்த பல்செட்டை துலக்குவது செம comedyaa  இருக்கும். பொக்கை வாயோடும் சுருங்கிய தோலோடும் கிடைக்கும் முத்தம் சிலிர்ப்பு !! கொஞ்ச நேரம் வேலை பார்த்ததற்கே அலுக்கும் நமக்கு. ஆனால் விடி காலையில் எழுந்தது முதல் உறங்கும் வரை சமைப்பது, மாட்டுக்கு வைகோல் குடுப்பது, சாணம் அள்ளுவது என்று அம்மாச்சி எப்போதும் பிஸி தான். சாதாரண புளி குழம்பே அம்மாச்சி கை பக்குவத்தில் கமகமக்கும். 70 வயதில் பார்வை குன்றிய கண்கள், அவ்வளவாக நடக்கவும் முடியாத காலத்திலும் ஆக்டிவாக இருப்பார். என்னை ரொம்ப கொஞ்சியதெல்லாம் இல்லை. ஒவ்வொரு விடுமுறைக்கும் தான் போவோம். ஒரு வாரம் தங்கி விட்டு கிளம்பும் நாளில் மனசே இருக்காது. வீட்டு வாசல் தாண்டி வழியனுப்பும் போது அழுதே விடுவார்.

 இன்று அம்மாச்சி இல்லை. இறந்து ஒரு வருடம் ஆகிறது. அவர் இருந்த நாளை விட காலஞ்சென்றதர்க்கு பிறகு அவரை நினைக்காத நாளே இல்லை. காரணம் அம்மா !! அம்மாச்சி இறந்த போது அம்மாவின் கண்ணீரில் " என் தாய் வழி தொடர்புகள் போய் விட்டதே " என்ற வலி. உடலை எடுத்து சென்ற ஊர்வலத்தை மறைத்து விழுந்து கும்பிட்டார். எனக்கு அது சொல்லாமல் சொன்ன விஷயங்கள் ஆயிரம். அத்தனை நேரம் அமைதியாயிருந்த தாத்தா சிதையில் தீ வைக்கும் முன் தாலியை கழட்டும் போது அழுத அழுகையில் ஒரு தலைமுறையின் காதல் தெரிந்தது !!

P.S: Written 4 years ago. Posting since it's ammachi's anniversary today