Wednesday, November 15, 2017

தெற்கிலிருந்து ஒரு சூரியன்


திராவிட கட்சிகளில் ஊழல் உண்டு. சாதி பார்த்து தான் வேட்பாளர் நிறுத்துகிறார்கள். இந்த நாட்டுக்கு அவர்களால் இன்னும் எவ்வளவோ செய்திருக்க முடியும் என்பதில் எல்லாம் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் "திராவிடத்தால் வீழ்ந்தோம்" என்பதை எப்பொழுது கேட்டாலும் தீயாய் சுடும்.


திராவிட கொள்கைகளை புரிந்து கொள்வது பெரிய சூத்திரமில்லை. கொஞ்சம் common sense, மனிதாபிமானம், ஜனநாயகத்தில் நம்பிக்கை, சமூகநீதி, சமத்துவம் ஆகியவற்றில் உடன்பாடு இருந்தால் போதும். திமுக பல நேரங்களில் இவற்றின் தடம் மாறி சென்றிருக்கிறது. அனால் இன்றும் அதன் அடிப்படை அவை தான் என்றே நம்புகிறேன். இங்கு தான் அரசியலில் possibility என்பது வருகிறது. "ஊரே washing machineல போட்டது மாதிரி இருக்கு" என்று 'ஷங்கர்'த்தனமான புரிதல்களோடு இருப்பவர்களால் இதை உணர்ந்து கொள்ள முடியாது.



சரி.. திராவிட இயக்கங்களின் மேலுள்ள ஈடுபாடு வெறும் Emotional connectஆ? நிச்சயம் இல்லை. தரவுகளின் அடிப்படையிலே கல்வி, சுகாதாரம், தொழில் வளர்ச்சி, மனித வளம் என்று எல்லா குறியீட்டுகளிலும் தமிழ்நாடு முதன்மை மாநிலங்களில் ஒன்று. ஒரே தேசம் என்று குறிப்பிடப்படும் நிலப்பரப்பில் 1000km சொச்சம் தூரம் உள்ளவர்களால் முடியாத பொழுது, இது இந்த மண்ணின் மக்களின் சாதனை 5௦ ஆண்டு கால ஆண்ட கட்சிகளுக்கு சம்பந்தமில்லை என்று சொல்வது முட்டாள்த்தனம் அன்றி வேறென்ன? 



NewYork timesல் 'the land ruled by cine stars is one of the prosperous state in india' என்ற கட்டுரை, NEET பிரச்னையின்போது நுழைவுத்தேர்வு இல்லாமலே தமிழகம் எப்படி சுகாதாரத்தில் சாதித்தது என்ற கட்டுரை என எல்லாம் சிதறி கிடந்தது. குஜராத் மாடல் என்று வட இந்திய ஊடகங்கள் முழங்கியபோது தமிழ்நாடு எந்த விதத்திலும் அதற்கு சளைத்ததல்ல என்று இங்குள்ள ஊடகங்கள் ஒன்று சேர்ந்து பதிலடி கொடுத்திருக்க வேண்டும். இவ்வளவு காலம் கழித்தானாலும் மிக சரியான ஒரு தருணத்தில் பொதுத்தளத்தில் எளிய மக்களுக்கு சேரும் வண்ணம் தெற்கிலிருந்து ஒரு சூரியனை 'தி ஹிந்து' உருவாக்கியிருக்கிறது



இந்த கட்டுரைகள் யாவும் யாரோ முகம் தெரியாத ஒருவரால் வாட்சப்பிலோ முகநூலிலோ பதியப்பட்டவை அல்ல. தரவுகளின் அடிப்படையில் அந்தந்த துறையில் சமூகத்தால் அங்கீகரிக்க பட்டவர்களின் பதிவுகள். இவர்களில் பலரே இந்த இயக்கத்தை பல நேரங்களில் எதிர்த்தவர்கள் தான். 



தனிப்பட்ட அரசியல் பிம்பத்தின் மீது பிணைப்பு கொள்ள விரும்பாத எனக்கே சண்முகநாதன், இமயம் போன்றவர்களின் கட்டுரைகள் நெஞ்சை தொட்டது. 



ஒரு இயக்கத்தின் மீது பெருவாரியான மக்கள் ஈடுபாடு கொள்வதென்பது அவர்களால் அந்தந்த காலக்கட்டங்களில் தேர்ந்தெடுக்கப்படும். நாளை திராவிடத்தை ஒதுக்கி முழு தமிழ் தேசியமோ, தலித் இயக்கமோ ஏன் மதவாத இயக்கமோ தேர்ந்தெடுக்கப்படலாம். ஆனால் கடந்த காலத்தில் இந்த மண்ணிற்கு மாற்றத்தை ஏற்படுத்தியவர்களை அங்கீகரிக்க மறப்பது அறமாகாது.

அந்த அங்கீகாரம் தான் "தெற்கிலிருந்து ஒரு சூரியன்"



சமஸ் மற்றும் 'தி ஹிந்து' குழுவினருக்கு பாராட்டுகளும் நன்றிகளும்.