Wednesday, November 15, 2017

தெற்கிலிருந்து ஒரு சூரியன்


திராவிட கட்சிகளில் ஊழல் உண்டு. சாதி பார்த்து தான் வேட்பாளர் நிறுத்துகிறார்கள். இந்த நாட்டுக்கு அவர்களால் இன்னும் எவ்வளவோ செய்திருக்க முடியும் என்பதில் எல்லாம் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் "திராவிடத்தால் வீழ்ந்தோம்" என்பதை எப்பொழுது கேட்டாலும் தீயாய் சுடும்.


திராவிட கொள்கைகளை புரிந்து கொள்வது பெரிய சூத்திரமில்லை. கொஞ்சம் common sense, மனிதாபிமானம், ஜனநாயகத்தில் நம்பிக்கை, சமூகநீதி, சமத்துவம் ஆகியவற்றில் உடன்பாடு இருந்தால் போதும். திமுக பல நேரங்களில் இவற்றின் தடம் மாறி சென்றிருக்கிறது. அனால் இன்றும் அதன் அடிப்படை அவை தான் என்றே நம்புகிறேன். இங்கு தான் அரசியலில் possibility என்பது வருகிறது. "ஊரே washing machineல போட்டது மாதிரி இருக்கு" என்று 'ஷங்கர்'த்தனமான புரிதல்களோடு இருப்பவர்களால் இதை உணர்ந்து கொள்ள முடியாது.



சரி.. திராவிட இயக்கங்களின் மேலுள்ள ஈடுபாடு வெறும் Emotional connectஆ? நிச்சயம் இல்லை. தரவுகளின் அடிப்படையிலே கல்வி, சுகாதாரம், தொழில் வளர்ச்சி, மனித வளம் என்று எல்லா குறியீட்டுகளிலும் தமிழ்நாடு முதன்மை மாநிலங்களில் ஒன்று. ஒரே தேசம் என்று குறிப்பிடப்படும் நிலப்பரப்பில் 1000km சொச்சம் தூரம் உள்ளவர்களால் முடியாத பொழுது, இது இந்த மண்ணின் மக்களின் சாதனை 5௦ ஆண்டு கால ஆண்ட கட்சிகளுக்கு சம்பந்தமில்லை என்று சொல்வது முட்டாள்த்தனம் அன்றி வேறென்ன? 



NewYork timesல் 'the land ruled by cine stars is one of the prosperous state in india' என்ற கட்டுரை, NEET பிரச்னையின்போது நுழைவுத்தேர்வு இல்லாமலே தமிழகம் எப்படி சுகாதாரத்தில் சாதித்தது என்ற கட்டுரை என எல்லாம் சிதறி கிடந்தது. குஜராத் மாடல் என்று வட இந்திய ஊடகங்கள் முழங்கியபோது தமிழ்நாடு எந்த விதத்திலும் அதற்கு சளைத்ததல்ல என்று இங்குள்ள ஊடகங்கள் ஒன்று சேர்ந்து பதிலடி கொடுத்திருக்க வேண்டும். இவ்வளவு காலம் கழித்தானாலும் மிக சரியான ஒரு தருணத்தில் பொதுத்தளத்தில் எளிய மக்களுக்கு சேரும் வண்ணம் தெற்கிலிருந்து ஒரு சூரியனை 'தி ஹிந்து' உருவாக்கியிருக்கிறது



இந்த கட்டுரைகள் யாவும் யாரோ முகம் தெரியாத ஒருவரால் வாட்சப்பிலோ முகநூலிலோ பதியப்பட்டவை அல்ல. தரவுகளின் அடிப்படையில் அந்தந்த துறையில் சமூகத்தால் அங்கீகரிக்க பட்டவர்களின் பதிவுகள். இவர்களில் பலரே இந்த இயக்கத்தை பல நேரங்களில் எதிர்த்தவர்கள் தான். 



தனிப்பட்ட அரசியல் பிம்பத்தின் மீது பிணைப்பு கொள்ள விரும்பாத எனக்கே சண்முகநாதன், இமயம் போன்றவர்களின் கட்டுரைகள் நெஞ்சை தொட்டது. 



ஒரு இயக்கத்தின் மீது பெருவாரியான மக்கள் ஈடுபாடு கொள்வதென்பது அவர்களால் அந்தந்த காலக்கட்டங்களில் தேர்ந்தெடுக்கப்படும். நாளை திராவிடத்தை ஒதுக்கி முழு தமிழ் தேசியமோ, தலித் இயக்கமோ ஏன் மதவாத இயக்கமோ தேர்ந்தெடுக்கப்படலாம். ஆனால் கடந்த காலத்தில் இந்த மண்ணிற்கு மாற்றத்தை ஏற்படுத்தியவர்களை அங்கீகரிக்க மறப்பது அறமாகாது.

அந்த அங்கீகாரம் தான் "தெற்கிலிருந்து ஒரு சூரியன்"



சமஸ் மற்றும் 'தி ஹிந்து' குழுவினருக்கு பாராட்டுகளும் நன்றிகளும்.

Friday, May 19, 2017

என் ஃப்ரண்ட போல யாரு மச்சான் - காட்சி 3

"யோவ்.. மணி எட்ட தாண்டி அஞ்சு நிமிஷம் ஆச்சு.. இன்னும் உருட்டிக்கிட்டு கெடக்க.. எடுய்யா சீக்கிரம்.. நாங்கல்லாம் ஆளு ஏத்த வேணாமா"

அரசு பேருந்து கண்டக்டர் வண்டி முன் வந்து இரைந்தான்.

HMT டிரைவர் கண்டுகொள்ளவேயில்லை. பஸ் டயர் இன்ச் பை இன்ச் ஆக நகர்ந்துகொண்டிருந்தது.

"ஏன்னே.. இவ்வளவு கூட்டம் பத்தாதா.. வண்டிய எடுத்தா என்ன" என்று படியில் நின்றவாரே கண்டக்டரிடம் கேட்டான் பரிதி

"அட நீ வேற ஏன்பா.. நா எப்போவோ விசிலு குடுத்திட்டேன். அவரு தான் எடுக்கல. இதுக்கு மேல எதாவது சொன்ன அப்பறம் பேசிப்புடுவாரு"

"வர வேண்டியவங்க வந்தாச்சு அதெல்லாம் வண்டி இப்ப கெளம்பிடும்" என்றான் பரிதியுடனிருந்த சத்யா

"யாரு"

"அதோ" என்று அவன் கண் காட்டிய திசையில் ஒருவர் ஸ்கூட்டியில் வந்து கொண்டிருந்தார். அவர் பின் அமர்ந்திருந்த பெண் வேகமாக இறங்கி பஸ்ஸின் முன் வாசல் வழியாக படியில் நின்றிருந்தவர்களை மீறி உள் நுழைந்தாள். அவளுக்காகவே காத்திருந்தது போல் பஸ் சீறி பாய்ந்தது

"யார்ரா இது "
"நம்ம காலேஜ் தான்.. BSC chemistry பாத்ததில்ல"
"இல்லையே பேரு"
"சுதா"

அரை மணி நேர பிரயாணம் முழுவதும் அவளையே பார்த்து கொண்டு வந்தான் பரிதி

"ஆர்ட்செல்லாம் எறங்குங்க"

மொத்த கூட்டமும் இறங்கி கல்லூரிக்குள் சென்று கொண்டிருந்தது 

Tuesday, April 4, 2017

என் ஃப்ரண்ட போல யாரு மச்சான் - காட்சி 2

சில வருடங்களுக்கு முன்பு 

"ரொம்ப தேங்க்ஸ் சார்"

"பரவால்லப்பா. இந்த காலேஜ் நம்ம ஊருக்கு வர காரணமே உங்க அப்பா தான். அப்புறம் இதக்கூட நான் பண்ணலேன்னா எப்படி. என்ன நீ தான் பெரிய பெரிய இடத்தெல்லாம் விட்டுட்டு இங்கு வந்து படிக்க தேவையில்ல" 

"இல்ல சார். அவர் எனக்கு சின்ன வயசுலிருந்தே எல்லாத்தயும் பாத்து பாத்து செஞ்சார். இப்ப அவர இந்த நிலைமையில தனியா விட்டுட்டு நா போறது சரிவராது"

"ரொம்ப நல்ல மனசுப்பா உனக்கு"

தயாளன் கல்லூரி முதல்வருடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது ஹாஸ்டல் வார்டன் உள்ளெ நுழைந்தார். 

"சார்.. பசங்க எல்லாம் போராட்டம் பண்றானுங்க"

"போராட்டமா எதுக்கு"

"ஹாஸ்டெல்ல சரியான வசதிகள் இல்லயாம். நீங்க வந்து பேசணுமாம்" 

"என்னயா அநியாயமா இருக்கு. இப்ப தான் வானத்திலேருந்து குதிச்சானுங்கலாமா. சரி வா போலாம்" 

தயாளனும் அவர்களுடன் நடந்தான். விடுதி முன்பு கூட்டமாக அமர்ந்திருந்தனர். அதிக பட்சம் நூறு பேர். பனியன் கைலி சகிதமாய் பெரும்பான்மையோர். தண்ணீர் சரியாய் வருவதில்லை, சாப்பாடு மோசம், பவர் கட் என்று ஏகப்பட்ட புகார்கள் சொல்லி கொண்டிருந்தனர். முதல்வர் கூடிய விரைவில் சரி செய்யப்படுமென்றும், இதற்காக குழு அமைக்க படுமென்றும் வாக்கு கொடுத்தார். பேசிக்கொண்டிருந்த மாணவர்கள் ஓரத்தில் நின்ற ஒருவனின் கண் அசைவுக்கு ஏற்ப பேசுவதை தயாளன் கவனித்தான். அவன் சைகையில் முதல்வரின் பதிலுக்கு சரி என்று சொல்லவும் இவர்களும் ஒத்துக்கொண்டார்கள். கூட்டம் கலைந்து சென்றது. 

"சார்.. இதெல்லாம் அந்த பரிதி பயல் பண்ற வேலை சார்" என்றார் வார்டன்.

தயாளன் திரும்பி பார்த்தான். பரிதி கூட்டத்தோடு கல்லூரியை நோக்கி சென்று கொண்டிருந்தான். 

Tuesday, March 21, 2017

என் ஃப்ரண்ட போல யாரு மச்சான் - காட்சி 1

ஐப்பசி மாத மழை அடித்து ஊத்திக் கொண்டிருந்தது.

ஆபீஸிலிருந்து வெளியே வந்த தயாளன் வேகமாக ஓடி காரினுள் ஏறினான்.

"வீட்டுக்கு தானனே"

"ஆமா காளி"

கேட்டை விட்டு ரோட்டிற்க்கு வந்தது பொலிரோ. எதிர் வரும் எந்த வண்டியுமே தெரியவில்லை.

"மெதுவாவே போப்பா"

"சரி னே"

கார் மெயின் ரோட்டிலிருந்து இடதுபுறமாக தெருவில் இறங்கியது. பெய்த மழையினால் உருவான சகதியில் உருண்டு வந்த டயர் திடீர் பிரேக்கினில் நின்றது. பைல்களை மேய்ந்து கொண்டிருந்த தயாளன் நிமிர்ந்து பார்த்தான்.

"என்னாச்சுப்பா"

"தெரியலனே, மழ பேஞ்சதுல ஏதாச்சும் மரம் விழுந்துருக்கும். என்னனு பாக்குறேன்"

காளி காரை திறந்து இறங்கிய சில நொடிகளிலேயே ஆ என்ற அலறல் சத்தம் கேட்டது. வேகமாக பைல்களை நகர்த்தி விட்டு காரிலிருந்து இறங்கினான் தயாளன். இறங்கிய வேகத்தில் அவன் முதுகில் விழுந்தது ஒரு வெட்டு. சுதாரிப்பதற்குள் சரமாரியாக அவன் உடல் பதம்பார்க்கப்பட்டது.  ரத்த வெள்ளத்தில் சரிந்தான் தயாளன். அவன் குருதி மழை நீரோடு கலந்து ஓட ஆரம்பித்தது