சில வருடங்களுக்கு முன்பு
"ரொம்ப தேங்க்ஸ் சார்"
"பரவால்லப்பா. இந்த காலேஜ் நம்ம ஊருக்கு வர காரணமே உங்க அப்பா தான். அப்புறம் இதக்கூட நான் பண்ணலேன்னா எப்படி. என்ன நீ தான் பெரிய பெரிய இடத்தெல்லாம் விட்டுட்டு இங்கு வந்து படிக்க தேவையில்ல"
"இல்ல சார். அவர் எனக்கு சின்ன வயசுலிருந்தே எல்லாத்தயும் பாத்து பாத்து செஞ்சார். இப்ப அவர இந்த நிலைமையில தனியா விட்டுட்டு நா போறது சரிவராது"
"ரொம்ப நல்ல மனசுப்பா உனக்கு"
தயாளன் கல்லூரி முதல்வருடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது ஹாஸ்டல் வார்டன் உள்ளெ நுழைந்தார்.
"சார்.. பசங்க எல்லாம் போராட்டம் பண்றானுங்க"
"போராட்டமா எதுக்கு"
"ஹாஸ்டெல்ல சரியான வசதிகள் இல்லயாம். நீங்க வந்து பேசணுமாம்"
"என்னயா அநியாயமா இருக்கு. இப்ப தான் வானத்திலேருந்து குதிச்சானுங்கலாமா. சரி வா போலாம்"
தயாளனும் அவர்களுடன் நடந்தான். விடுதி முன்பு கூட்டமாக அமர்ந்திருந்தனர். அதிக பட்சம் நூறு பேர். பனியன் கைலி சகிதமாய் பெரும்பான்மையோர். தண்ணீர் சரியாய் வருவதில்லை, சாப்பாடு மோசம், பவர் கட் என்று ஏகப்பட்ட புகார்கள் சொல்லி கொண்டிருந்தனர். முதல்வர் கூடிய விரைவில் சரி செய்யப்படுமென்றும், இதற்காக குழு அமைக்க படுமென்றும் வாக்கு கொடுத்தார். பேசிக்கொண்டிருந்த மாணவர்கள் ஓரத்தில் நின்ற ஒருவனின் கண் அசைவுக்கு ஏற்ப பேசுவதை தயாளன் கவனித்தான். அவன் சைகையில் முதல்வரின் பதிலுக்கு சரி என்று சொல்லவும் இவர்களும் ஒத்துக்கொண்டார்கள். கூட்டம் கலைந்து சென்றது.
"சார்.. இதெல்லாம் அந்த பரிதி பயல் பண்ற வேலை சார்" என்றார் வார்டன்.
தயாளன் திரும்பி பார்த்தான். பரிதி கூட்டத்தோடு கல்லூரியை நோக்கி சென்று கொண்டிருந்தான்.
No comments:
Post a Comment