1100 காலத்திலிருந்தே ரிங்க்டோன்கள் மேல் ஒரு அலாதி ஆர்வம் உண்டு. Music series வாங்கி விருப்பமான பாடல்களை ரிங்க்டோனாக வைத்து கொள்ள வேண்டும் என்பதே ஒரு பெருங்கனவாக இருந்தது. MP3 cutter download செய்து பாடல்களை வெட்டி ஒட்டி கொண்டிருப்பேன். இதெல்லாம் மூன்று வருடங்களுக்கு முன்பு. இப்போதெல்லாம் default ரிங்க்டோன் தான். ஆனால் ஒரு இரண்டு மாதங்களாக புதிதாக ஒரு இசை கோர்ப்பை ரிங்க்டோனாக வைத்துள்ளேன். அலாரம் டோனும் இது தான். பயணத்தின் போதும் வேலை செய்து கொண்டிருக்கும் போதும் அடிக்கடி இதை கேட்பதுண்டு. அது கேம் ஆப் த்ரோன்சில் இடம்பெற்ற Needle theme.
Needle ஒன்றும் கேம் ஆப் த்ரோன்சின் புகழ்பெற்ற இசைக்கோர்ப்பு அல்ல. இதை விட செர்சி செப்ட் ஆப் பேலரை கொளுத்தும் Light of seven மிகச்சிறந்த composition. ஆனால் Needle கேட்கும் பொழுது எழும் ஆர்யா ஸ்டார்க்கின் நினைவலைகள் தான் அதை தனித்துவமாக்குகிறது.
கேம் ஆப் த்ரோன்சில் எத்தனையோ பிடித்தமான கதாப்பாத்திரங்கள் இருந்தாலும் ஆர்யா ஸ்டார்க் மேல் ஒரு தனி பிரியம் உண்டு. நூல் நூற்க விரும்பிய பெண்களுக்கு மத்தியில் வாளேந்த விரும்பியவள் அவள். "நீ ஒரு அரசனை மணந்து கொள்வாய்.. உன் பிள்ளைகள் நாடாள்வார்கள்" போன்ற ஆசீர்வாதங்களை அவள் அறவே வெறுத்தாள். தான் அவர்களுள் ஒருவளல்ல என்று அந்த இளம் வயதிலேயே அவளால் உணர முடிந்தது. ஆருயிர் தந்தையின் தலை வெட்டப்படுவதை காணும் துயரத்திற்கு சற்றும் குறைவில்லாதது அவர் தலை வெட்டிய சத்தத்தில் பறந்த பறவைகள் சிறகடிக்கும் சத்தம். அதை அனுபவித்தவள். பொதுவாக தங்கள் உயிருக்கு உயிரானவர்கள் மரிக்கும் பொழுது அதனால் நிர்மூலமாகும் தங்கள் வாழ்வை எண்ணி வருந்துவது தான் பெண்களின் வழக்கம். ஆனால் ஆர்யா அவள் தந்தை மரணத்திற்கு பழி வாங்க விரும்பி அவர்களை தன் கையால் கொல்ல சபதமேற்றவள். இளவரசியாக பிறந்திருந்தாலும் உருப்படியாக பயணித்து, கண்டம் விட்டு கண்டம் சென்று பார்வையிழந்து, பிச்சையெடுத்து திரிந்து இறுதியில் முகமற்ற மனிதர்களின் பெருங்கலையை கற்றவள்.
அத்தனை இன்னல்களுக்கு இடையிலும் மனதில் ஏற்றிய வேள்வியிலிருந்து தழுவாது உற்றவர்களுக்காக போராடும் திறன் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.
No comments:
Post a Comment