பெங்களூரு வந்து ஒரு வருடம் ஆகிறது. எந்த புது இடத்துக்கு போனாலும் "Places to eat in.." என்று Google செய்யாமல் செல்வதில்லை. இங்கு வந்த பிறகு தான் கர்நாடக உணவுகள் பற்றிய ஒரு அறிமுகமே கிடைத்தது. நெடு நாட்களாகவே அதைப்பற்றி எழுத நினைத்தாலும் சோம்பல் பட்டிருந்தேன். இன்று ட்விட்டரில் யாரோ ஒருவர் கர்நாடக cusine பற்றி பேச உடனே எழுத தோன்றியது.
பெண்ணெ தோசா:
கர்நாடகத்தில் உள்ள தாவன்கெரே தான் பெண்ணெ தோசையின் பூர்விகம். இந்த பெயரிலேயே பெங்களூரு எங்கும் கடைகள் நிறைந்திருக்கும். நம் ஊர் ஹோட்டலில் தோசை என்பது முருகலாகவோ இல்லை கல் தோசை ஊத்தாப்பமாகவோ தான் கிடைக்கும். வீட்டு தோசைக்கும் கல் தோசைக்கும் இடைப்பட்ட பதத்தில் மிருதுவாக இருப்பது தான் பெண்ணெ தோசா. மிருதுவாக இருப்பதற்கு அவல் சேர்க்கிறார்கள் என்று ரெசிபி பார்த்து தெரிந்து கொண்டேன். கூட உருளைக்கிழங்கு பல்யா. உருளையும் வெங்காயமும் சேர்த்த மஞ்சள் போடாத மசாலா தான். எனக்கு அந்த பல்யா மேல் பெரிதாக விருப்பம் இல்லை. அது இல்லாமல் இன்னும் கொஞ்சம் மாவு அதிகம் ஊற்றி தர முடியுமா என்றெல்லாம் கேட்க தோன்றியிருக்கிறது. தொட்டு கொள்ள "ராவா"ன தாளிக்காத தேங்காய் சட்னி. வெறும் தேங்காயை நைஸ் ஆக இல்லாமல் அதே நேரத்தில் சில்லு சில்லாகவும் இல்லாமல் அரைப்பதன் சூட்சமம் புரியவில்லை. தனியாகவே அந்த சட்னியை வழித்து நக்கலாம். சரி இதற்க்கு ஏன் பெண்ணெ தோசா என்று பெயர். ஏனென்றால் நெய் எண்ணெய் தவிர்த்து வெறும் வெண்ணையை பயன்படுத்துவதால். திகட்டி விடமால் மிக சரியான அளவில் வெண்ணை சேர்ப்பதில் இருக்கிறது பெண்ணெதோசையின் சுவை. போதா குறைக்கு விறகு அடுப்பில் சமைக்கும் ஹோட்டலும் கிடைத்தால் சூடாக வாழையிலையில் வைக்கப்படும் பெண்ணெ தோசையை முகர்ந்து, உண்டு நேராக சொர்கத்துக்கே செல்லலாம்
தொன்னெ பிரியாணி:
வந்த புதிதில் யாருமே இதை பற்றி பாசிட்டிவாக சொல்லவில்லை. ஆனால் ஹைதராபாத் ஸ்டைல் தம் இல்லாமல் கறியோடு சேர்த்து சமைக்கப்படும் நம்ம ஊர் ஊண் சோறு பிரியர்களுக்கு தொன்னெ நிச்சயம் பிடிக்கும். பட்டை கிராம்பு போன்ற spices இல்லாமால் புதினா பச்சை மிளகாய் அதிகம் சேர்த்து அதே சீராக சம்பா மாதிரி உள்ள அரிசியில் சமைப்பது தான் தொன்னெ பிரியாணி ஸ்டைல். சிவாஜி மிலிட்டரி ஹோட்டலில் மதுரை அம்சவல்லி, திண்டுக்கல் வேணு பிரியாணிக்கு இணையாக மட்டன் பூவை போல் வெந்திருக்கும். தொட்டுக்கொள்ள சற்று தண்ணி அதிகம் உள்ள தயிர் பச்சடி. இங்கு அனைத்து இடங்களிலும் வெள்ளரியும் மறக்காமல் சேர்க்கிறார்கள். அமிர்தமே ஆனாலும் சமைக்கும் பக்குவத்தில் உள்ளது சுவை. வாங்கிய பிரியாணியை மொத்தமாக தூக்கி போடும் சம்பவங்களும் நடந்திருக்கிறது. ஆதலால் உணவகம் அறிந்து உண்பீர்
நீர் தோசை:
கரண்டி இல்லாமல் கிட்டத்தட்ட ரவா தோசை போல் மாவை விசிறி அடித்து செய்வது தான் நீர் தோசை. மாவின் பக்குவத்திற்கு google search செய்யுங்கள். அம்மா வருடம் தவறாது கந்த சஷ்டி விரதமிருப்பார். கோவிலுக்கு போயிட்டு வந்து அர்ச்சனை செய்த தேங்காயை துருவி வெல்லம் சேர்த்து சாப்பிடுவார். அது தான் இங்கு சில இடங்களில் தொட்டு கொள்ள தருகிறார்கள். ஒரு லைட்டான இரவு உணவிற்கு நிச்சயம் நல்ல சாய்ஸ்.
தட்டே இட்லி:
ஓவலாக இருக்கும் இட்லியின் ஷேப்பையே மாற்றி தட்டு போல் இருப்பது தான் தட்டே இட்லி. இன்று தமிழ்நாட்டின் கல்யாண Buffetகளிலேயே கிடைக்கிறது. இங்கு கிடைக்கும் நார்மல் இட்லி அது அரிசி உளுந்து கலந்த மாவில் தான் செய்கிறார்களா என்று சந்தேகம் ஏற்படுத்தும். பெரும்பாலும் கல்லை போன்றோ நெருநெருவாகவும் இருக்கும். ஆனால் என்ன மாயமோ பெரும்பாலான இடங்களில் தட்டே இட்லி மிருதுவாகவே இருந்திருக்கிறது. முப்பது ரூபாய்க்கு இரண்டு இட்லியில் வயிறு நிறைந்துவிடும். பிரச்னை வேக வைக்க பிளாஸ்டிக் போன்ற ஒரு வஸ்துவை பயன்படுத்துகிறார்கள். தமிழ்நாட்டில் இட்லி வேக வைக்கும் துணிக்கே தனி மணம் உண்டு. அந்த plastic துணி தான் தட்டே இட்லி மேல் அச்சம் ஏற்படுத்துகிறது .
ராகி முத்தே: வாழ்நாளில் காசு கொடுத்து களி தின்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. கர்நாடகாவில் எளிய மக்களின் உணவு ராகி முத்தே. உருண்டையான ராகி களி பெரும்பான்மையான ரோட்டு கடைகளில் கிடைக்கிறது. சூடான களியில் சிக்கன் குழம்பு ஊற்றி பிசைந்து சாப்பிடுவதும் சுவையாகத் தான் இருக்கிறது. முகில் ராகி உணவுக்கும் கர்நாடகாவிற்கும் உள்ள தொடர்பு பற்றி உணவு சரித்திரம் புத்தகத்தில் எழுதியிருப்பார். ரசித்து ராகி களி உண்ணும் கன்னடர்களை கண்டால் கு.சிவராமன் ரொம்ப சந்தோஷப்படுவார் என்று நினைக்கிறேன்
ரவா இட்லி: ரவை உடன் தேங்காய் வறுத்த கடலை பருப்பும் சேர்த்து வேகவைக்கிறார்கள். இதன் அளவும் மூன்று இட்லிகளை சேர்த்ததாக இருக்கிறது
ஒரு முறை பொங்கல் ஆர்டர் செய்தேன். பொங்கல் மேல் தயிர் பச்சடி ஊற்றி தந்தார்கள். இதை எப்படிடாசாப்பிடுவது என்று யோசித்தே வாயில் வைத்தேன் அத்தனை மோசமில்லை.
அக்கி ரொட்டி தொடங்கி இன்னும் சரியாக பெயர் தெரியாத உத்தர கர்நாடக உணவுகள் நிறைய உண்டு. ஏனோ அக்கி ரொட்டி என்னை ஈர்க்கவில்லை அதனால் அதே வகையான பிற உணவுகளையும் இன்னும் ருசி பார்க்கவில்லை.
காலை உணவுக்கே சித்திரண்ணா (lemon rice) வாங்கிபாத் (Brinjal rice) பிசி பேலா பாத் கிடைக்கும். வெரைட்டி ரைஸ் பிரியர்கள் வெளுத்து கட்டலாம்.
மற்ற படி சற்றே உப்பிய தட்டையை போன்ற மத்தூர் வடையெல்லாம் என்னை போன்ற மொறு மொறு மசால் வடை பிரியர்கள் தவிர்த்து விடவும்.
இன்னும் நிறைய உணவுகள் விடுபட்டிருக்கலாம். சக ஹிருதயர்கள் கமெண்ட் செய்யவும்
Nice post Arun
ReplyDelete