2011. முகப்புத்தகத்தில் உள்ள எண்ணற்றோர்களை போல நானும் 2G ஊழல், ஈழம் என்று memes பகிர்ந்து கொண்டிருந்தேன். தமிழக அரசியலில் வைகோவுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்காததற்கு வருத்தம் இருந்தது. விஜயகாந்த் நல்லவர் அவரால் மாற்றத்தை கொண்டு வர முடியும் என்ற எண்ணம் இருந்தது. அருகே நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் சீமான் பேச்சை கேட்டு முறுக்கேறி போயிருந்தேன். ஆனால் இதெல்லாம் சட்டமன்ற தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்பு வரை. தேர்தல் நெருங்க நெருங்க பார்க்கும் அனைவரும் குறிப்பாக ஊடகங்களும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து விட்டால் நாட்டில் தேனாறும் பாலாறும் ஓடும் என்று பிம்பம் ஏற்படுத்தி வைத்திருந்தனர். மக்களை நெருக்கும் அளவுக்கு அதிகாரத்தின் கரங்கள் நீண்டிருந்த அவ்வேளையில் அதிமுக ஆட்சிக்கு வருவதில் எந்த வருத்தமும் இல்லை. ஆனால் அரசியல் இதழ்கள் தொடர்ந்து வாசித்து வந்ததனால் 91-96ஆட்சி பற்றி இருந்த அறிவு, 2001-2006 ஆட்சியிலும் ஜெ காட்டிய அடக்குமுறை, நாடாளுமன்ற தேர்தலில் 0 வாங்கியது, ஈழம் பற்றிய அவரது கருத்துக்கள் எல்லாம் ஜெயலலிதாவை ஆபத்பாந்தவராக காண மறுத்தது. ஒட்டு மொத்த தமிழகமும் அவரை நோக்கி நகர்ந்த அந்த வேளையில் தான் நான் திமுக பற்றியும் கலைஞரை பற்றியும் அறிந்து கொள்ள தொடங்கியிருந்தேன். பின் அடுத்த சில வருடங்களில் அது திராவிடம் சமூக நீதி பற்றிய புரிதலை நோக்கி நகர்ந்தது.
History will be kinder to me
என்று மன்மோகன் சிங் சொன்னதாய் சொல்வார்கள். ஆனால் History should be kinder
to him என்று நான் நினைப்பது கலைஞர் ஒருவருக்கு மட்டும் தான். கலைஞர் ஒன்றும் மனிதப்புனிதர் அல்ல. தற்கால அரசியல் சூழலில் அவரை மட்டும் அப்படி எதிர் பார்ப்பது சரியும் இல்லை. அவரிடம் குறை கூற ஏராளம் உண்டு. அவர் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம் என்பதிலும் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் தமிழகத்திற்கு அவர் ஆற்றிய பணிகளை
மறுத்து விட்டு அனைத்து இன்னல்களுக்கும் அவரையே குற்றம் சாட்டுவதை ஏற்று கொள்ள
முடியாது. இந்த பதிவை கலைஞரின் மேல் உள்ள அவதூறுகளுக்கு பதில் சொல்ல எழுதவில்லை.
அனைத்துக்குமான விளக்கம் இன்று பல தளங்களில் கிடைக்கிறது.
ஆட்சியில் இல்லாதிருக்கும்போது
அவர் உடல் நலிவுற்றதில் பெரும் வருத்தம் இருந்தது. ஆனால் அவரின் அந்திம காலத்தில்
தொடங்கிய திராவிடம் 2.0 விவாதங்கள், அவரின் மரணத்திற்கு தமிழகம் செலுத்திய அஞ்சலி,
மரணத்திற்கு பின் சமூகத்தின் அனைத்து தரப்பினரும் செலுத்தும் புகழஞ்சலிகள் மிகுந்த
மன நிறைவையே அளிக்கின்றன.
அவர் உடல் நலிவுற்றிருந்த போது
அவர் ஹிந்து கடவுள்களை பழித்ததனால் தான் இழுத்து கொண்டு கிடப்பதாக சில பதிவுகள் காண
நேர்ந்தது. என்னை கேட்டால் ஆத்திகர்கள் நடையாய் நடந்து கடவுளிடம் கேட்கும் வரங்களை
கேட்காமலே பெற்றவர் அவர். தமிழத்தின் எந்த தலைவருக்கும் வாய்க்காத மிக சிறப்பான
தனிப்பட்ட வாழ்வு அமையப்பெற்று ஆண்டு அனுபவித்து தான் போய் சேர்ந்தார். பொது
வாழ்விலும் அவருக்கே track record அதிகம். எல்லோருக்கும் தெரிந்த 50 ஆண்டு சட்டமன்ற
பணி போன்றவற்றை கடந்து மக்களால் நிராகரிக்கப்பட்டவர் என்று project செய்யப்பட்ட
இந்த கலைஞர் தான் சென்ற தேர்தலில் மாநிலத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில்
வெற்றி பெற்றவர் என்பதையும் இந்நேரத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன்.