“ஏய்யா வந்து ஒரு வாய் சாப்ட்டு போயா"
சாயந்தரத்திலிருந்து பல முறை கூப்பிட்டு விட்டாள் அன்னமயில்.
சபரி அசைந்தே கொடுக்கவில்லை. உட்கார்ந்து அசை போட்டு கிடந்த ஆட்டின் மேல் தலை வைத்து படுத்தே கிடந்தான்.
“ஒரு சின்ன புள்ளைக்கு சோறூட்ட வக்கில்ல நீ எல்லாம் என்ன பொம்பளை” - கயித்து கட்டிலை இழுத்து போட்டவாறே இரைந்தார் ரத்தினம்.
“ஆமா இவரு தான் இவ்வளவு நாள் பாத்து கிழிச்சாரு..” என்றவாறு சோற்றை பிசைந்து கொண்டு திண்ணைக்கே வந்தாள் அன்னமயில்.
***
“அய்யா ஒரு வாய் சாப்டுயா”
“அப்ப நீ குட்டிமணிக்கும் ஊட்டு அப்பத்தா”
“அது சோறு சாப்பிடாதுல்ல”
“அப்ப வேற எதாவது குடு”
வெளியில் ஒடித்து கிடந்த முருங்கை கொத்தை எடுத்து வந்தாள் அன்னமயில். காலையிலிருந்தே ஏகப்பட்டதை தின்று விட்டதால் பெரிதாய் அலட்டி கொள்ள வில்லை. போனால் போகிறதென்று இலையை வாங்கி மெல்ல ஆரம்பித்தது.
***
ரத்தினம் அன்னமயிலின் பேரன் தான் சபரி. இல்லாத அதிசயமாய் பெய்த மழையிடமிருந்து தப்பி மகன் ராமநாதன் குடும்பத்தோடு வந்து சேர்ந்தான். ரெண்டு நாளிலேயே தண்ணி எல்லாம் வடிஞ்சுடுச்சாம் என்று கிளம்பிய பொழுது தடுத்து விட்டாள் அன்னமயில்.
“வெள்ளம் வடிஞ்ச ஊருல கொள்ள நோயி பரவும். நீங்க வேணா போங்க புள்ள இங்கயே கொஞ்ச நாள் இருக்கட்டும்”
“இருக்கியாடா” என்று மகன் கேட்டதும், “நான் இருக்கேன் அப்பத்தா” என்றவாறு கட்டிக்கொண்டான்
புள்ளை பிறந்து கூட்டி போன பிறகு
சபரி சேர்ந்தால் போல் ஒரு பத்து நாள் இருந்தது இல்லை. எப்போது விட்டு போக சொன்னாலும் ராமநாதன் மறுத்து விடுவான். அவனை ஒன்றும் குறை சொல்ல முடியாது. 5 மைல் சைக்கிள் அழுத்தி மனமேல்க்குடி போய் தான் பள்ளிக்கூடம் படிச்சான். பின் கோயமுத்தூரில் காலேஜுக்கு அவனை சேர்க்க போயிருந்த வாத்தியார் எவ்வளவு பெரிய இடம் என்று சொல்லியே ஓய்ந்து போனார். படித்து முடித்தவுடன் வேலை. இரண்டு வருடத்தில் கல்யாணமும் முடிச்சாச்சு. மருமகளும் மகனுக்கு ஒன்றும் குறைச்சலில்லை. கும்பகோணத்தில் வசதியை வாழ்ந்திருந்தாலும் இங்கு வரும் போது எந்த குறையும் சொல்வதில்லை. வீட்டை பிரிச்சு கட்டனும் என்ற பொழுது கூட மறுத்து விட்டாள். “வேனாம்த்தே எல்லாரும் வாழ்ந்த வீடு அப்படியே இருக்கட்டும்”
சபரியை பார்க்காமல் அன்னமயிலுக்கு
தான் இருப்பு கொள்ளாது. திருவிழா பண்டிகை என்று அவர்கள் வந்து கிளம்பிய ரெண்டு நாளில்
இவளும் சென்னை சென்று விடுவாள். ரொம்ப நாள் இருப்பதில்லை. மாடு கண்ணு கெடக்கு, வீடு
போட்டமன்னிக்கே கிடக்கும் என்று சொல்லி இரண்டு நாளில் ஊருக்கு கிளம்பி விடுவாள். உண்மையில்
அதை எல்லாம் பார்த்து கொள்ள ஆட்களிருக்கிறார்கள். ரத்தினத்தை விட்டு இருக்க தான் மனசு
இருக்காது. “இத்தனை வருஷம் கழிச்சு யார் சமச்சோவா சாப்பிடனும்”
***
“என் ராசா.. தூங்கலாமா?”
“நா குட்டிமணி கூடயே படுத்துக்குறேன் அப்பத்தா”
“இல்லப்பா அது வெளில தான் தூங்கணும்”
“ஏன்”
“சொன்ன கேளுப்பா”
“அதெல்லாம் முடியாது”
அவன் சொல்வதை மதிக்காமல் ஆட்டை திண்ணையிலிருந்து இழுத்து சென்றாள் அன்னமயில். அது மே மே என்று தொடர்ந்து கத்த சபரி ஓடி வந்து பின்னால் இழுத்தான். ஆட்டை கட்டிய பிறகு முண்டிய அவனை தூக்கி கொண்டு சென்றாள் அன்னமயில். பின் இரவு வெகு நேரம் சபரி அழுகையை நிப்பாட்ட வில்லை. அதட்டியும் மிரட்டியும் தூங்க வைத்தாள்.
***
எப்போழுது ஊருக்கு வந்தாலும் சபரியை கையில் பிடிக்க முடியாது. ஊரையே சுற்றி வந்து விடுவான். “புள்ள தங்கமா இருக்கு ஊரு கண்ணே இது மேல தான் சுத்தி போடாத்தா” என்று சொல்லாதவர்களில்லை. ஆனால் இந்த முறை மொத்தமாய் முடங்கி போய் விட்டான். எல்லாம் இந்த ஆட்டினால் தான்.
இரண்டு வாரங்களுக்கு முன் கோட்டைபட்டினம் போன ரத்தினம் வரும்போது இந்த ஆட்டையும் இழுத்து கொண்டு வந்தார்.
“நம்ம மாரிமுத்து வீட்டு குட்டி. நல்ல இளசா இருக்குனு தூக்கி கொடுத்தான்”
சபரி வந்த உடனே “அப்பா கோட்” என்று கத்தி கொண்டு கிட்டே சென்றான்
“இதுக்கு பேர் என்ன தாத்தா”
“பேர் எல்லாம் வைக்கல பா”
“நா வைக்கட்டா.. ‘குட்டிமணி’”
அன்றிலிருந்து நாளும் பொழுதும் ஆட்டுடன் தான். தானாய் அவனுக்கு தோன்றியெதெல்லாம் அதனுடன் பேசிகொண்டிருந்தான். சும்மா விளையாட்டு தானே என்று அன்னமயிலும் கண்டு கொள்ள வில்லை. இப்பொழுது இந்த அளவுக்கு வளர்த்து விட்டது.
***
காலை விடிந்தவுடன் ஆடு மாட்டை மேய்ச்சலுக்கு அவிழ்த்து விட்டு சமையக்கட்டுக்குள் வந்தாள் அன்னமயில். ரத்தினம் காலையிலே கொல்லைக்கு போய் விட்டார். அவருக்கும் வேலை பார்ப்பவர்களுக்கும் சாப்பாடு செய்வது தான் இன்று பெரிய வேலை. மும்முரமாய் இருந்த பொழுது ஆடு கத்தும் சத்தம் கேட்டது. சனியன் அதுவே திண்ணைக்கு வந்து விட்டது எல்லாம் இந்த பயல் பண்ணிய வேலை என்று திட்டியவாறே வேலையே தொடர்ந்தாள்.
ஆடு கத்துவது நின்றபாடில்லை. சமைப்பதை விட்டு விட்டு திண்ணைக்கு வந்தாள் அன்னமயில். சபரி அசையமால் படுத்திருக்க ஆடு அவனை பார்த்து தொடர்ந்து கத்தி கொண்டிருந்தது. ஓடி போய் சபரியை தூக்கியவள் பதறிப்போனாள். உடம்பு நெருப்பாய் கொதித்தது. கண் விழிக்க முடியாமல் முனங்கி கொண்டிருந்தான்.
“ஐயோ என் புள்ளைக்கு என்னாச்சோ”
“ஏன்டா பச்சமுத்து கொல்லைக்கு போய் ஓங்க அய்யாவ ஒடனே கூட்டிகிட்டு வா”
“சரி ஆத்தா”
கொஞ்ச நேரத்தில் எல்லாரும் கூடி விட்டார்கள். சுடு தண்ணீரில் நனைத்து நெற்றியில் ஒத்தடம் கொடுத்தார்கள். “சாதாரண காய்ச்சலாத்தான் இருக்கும் நீ கவல படாத ஆத்தா” என்றாள் கலையரசி.
“மாமா ஒன்னும் பதட்டப்பட வேணாம்.. ராவுத்தர் வீட்டுக்கு ப்ளெசர் வந்துருக்கு. அர மணி நேரத்துல அறந்தாங்கி கூட்டி போயி குளுகோஸ் ஏத்திட்டோம்னா ஒன்னும் பிரச்சனையில்ல”
***
போகும் வழி எங்கும் அழுது கொண்டே வந்தாள் அன்னமயில். இந்த முறை நடவு வேலைகளும் இருந்ததால் சபரியை கவனிக்க முடியவில்லை. நாளை மகன் வந்து இதுக்கு தான் விட்டு போக சொன்னியா என்று ஒரு வார்த்தை கேட்டு விட்டால் என்ன செய்வது.
ஊர் எல்லை தாண்டும்போது “அய்யனாரப்பா என் புள்ளைய காப்பாத்து உன் கோயிலுக்கு வந்து கெட வெட்டறேன்” என்று வேண்டி கொண்டாள்.
***
வைரஸ் காய்ச்சல் எனவும் சரியாக சாப்பிடாததால் மயக்கமடைந்ததாகவும் ஆசுபத்திரியில் சொன்னார்கள். இரண்டு நாட்கள் தங்க வேண்டியதாக போய் விட்டது. மகனும் அடுத்த நாளே புறப்பட்டு வந்து அன்றிரவே கிளம்ப இருப்பதாக சொன்னான். அவர்கள் இருக்கும் பொழுதே கிட வெட்டு நடத்த முடிவு செய்தாள் அன்னமயில்.
அன்று ஞாயிற்றுகிழமை. ரத்தினத்தை பார்த்துக்க சொல்லி விட்டு வெள்ளனவே கிளம்பி ஊருக்கு வந்து விட்டாள். நல்ல கெடாவை தேடி ஆட்டு மந்தை வைத்திருக்கும் சோமு வீட்டிற்கு சென்றாள். எல்லாம் முத்தினதாய் இருந்தது.
“ஏன் ஆத்தா வீட்டிலே நல்ல இளங்குட்டி நிக்குதே நீ எதுக்கு ஊரு பூரா தேடுற”
“இல்ல பய அது மேல பாசமா இருப்பான்”
“அட என்ன ஆத்தா நீ.. இன்னைக்கு இல்லேனா இன்னொருநாள் வெட்டுபடனும். நல்ல இளம் ஆட்டுக்கறி கொடுத்தா தான் முடியாம இருக்க புள்ளைக்கும் நல்லது”
***
அவர்கள் வருவதற்கும் இங்கு பூசை போடுவதற்கும் சரியாக இருந்தது காரிலிருந்து இறங்கிய சபரிக்கு துண்ணூறு பூசி விட்டார் பூசாரி. அவன் ராமநாதன் தோளிலிருந்து இறங்கவேயில்லை. பின் வீட்டிற்கு போனதும் சாப்பாடு போட்டார்கள். கறியை நசுக்கி ஊட்டினார் ரத்தினம். மெதுவாக மெல்ல தொடங்கினான் சபரி.
No comments:
Post a Comment