Saturday, December 3, 2016

அம்மாச்சி

அம்மா எல்லாருக்குமே ஸ்பெஷல் ! அது போலவே அம்மா வழி சொந்தங்களும். அம்மாச்சியும் எனக்கு அப்படியே. அம்மாச்சி என்றவுடன் நினைவுக்கு வருவது அவரது சுருங்கிய தோல் தான். நினைவு தெரிந்த நாளிலிருந்தே அவர் பல்செட் தான் பயன்படுத்துவார். கர்மசிரத்தையாக அவர் அந்த பல்செட்டை துலக்குவது செம comedyaa  இருக்கும். பொக்கை வாயோடும் சுருங்கிய தோலோடும் கிடைக்கும் முத்தம் சிலிர்ப்பு !! கொஞ்ச நேரம் வேலை பார்த்ததற்கே அலுக்கும் நமக்கு. ஆனால் விடி காலையில் எழுந்தது முதல் உறங்கும் வரை சமைப்பது, மாட்டுக்கு வைகோல் குடுப்பது, சாணம் அள்ளுவது என்று அம்மாச்சி எப்போதும் பிஸி தான். சாதாரண புளி குழம்பே அம்மாச்சி கை பக்குவத்தில் கமகமக்கும். 70 வயதில் பார்வை குன்றிய கண்கள், அவ்வளவாக நடக்கவும் முடியாத காலத்திலும் ஆக்டிவாக இருப்பார். என்னை ரொம்ப கொஞ்சியதெல்லாம் இல்லை. ஒவ்வொரு விடுமுறைக்கும் தான் போவோம். ஒரு வாரம் தங்கி விட்டு கிளம்பும் நாளில் மனசே இருக்காது. வீட்டு வாசல் தாண்டி வழியனுப்பும் போது அழுதே விடுவார்.

 இன்று அம்மாச்சி இல்லை. இறந்து ஒரு வருடம் ஆகிறது. அவர் இருந்த நாளை விட காலஞ்சென்றதர்க்கு பிறகு அவரை நினைக்காத நாளே இல்லை. காரணம் அம்மா !! அம்மாச்சி இறந்த போது அம்மாவின் கண்ணீரில் " என் தாய் வழி தொடர்புகள் போய் விட்டதே " என்ற வலி. உடலை எடுத்து சென்ற ஊர்வலத்தை மறைத்து விழுந்து கும்பிட்டார். எனக்கு அது சொல்லாமல் சொன்ன விஷயங்கள் ஆயிரம். அத்தனை நேரம் அமைதியாயிருந்த தாத்தா சிதையில் தீ வைக்கும் முன் தாலியை கழட்டும் போது அழுத அழுகையில் ஒரு தலைமுறையின் காதல் தெரிந்தது !!

P.S: Written 4 years ago. Posting since it's ammachi's anniversary today

No comments:

Post a Comment